Search This Blog

Sunday, 10 March 2024

கோப்பைகள்


Photo credit: https://c1.wallpaperflare.com/preview/111/672/966/cup-top-view-coffee.jpg

இந்தக் கோப்பையைப் ஏந்தும்

லாவகத்துடன் தான்

விருப்பத்துடன் தான்

ஒவ்வொரு உறவையும்

ஏந்திக்கொள்கிறேன்



சில கோப்பைகள் பாரமாக

சில இலகுவாக

சில கோப்பைகள் அவற்றின்

பணி முடியுமட்டும்



சிலவற்றுக்கு

விரல்களின் வலிமை போதும்

சிலவற்றுக்கு

முழுக் கையையும்

பிரயோகிக்க வேண்டியிருக்கிறது



சில கோப்பைகள்

பிடித்துக்கொள்ள ஏதுவாக

சிலவற்றைக் கொஞ்சம் பயிற்சியுடன்

சில, கைப்பிடியற்று



வருகிறவண்ணமாய்த்தான்

அவை வருகின்றன

நான்தான் அவற்றைத்

தேர்ந்தெடுக்கிறேன்

பரிசாக வந்தவற்றை நான்

அதிகமாகப் பயன்படுத்துவதில்லை



வேண்டுமென்றே அவற்றை

நான் எறிந்து உடைப்பதில்லை

உணர்ச்சிவேகத்தில் பொருட்களை

எறிந்துடைக்கும் வயதில்

நான் இல்லை

தாமாகவே விழுந்தோ

கைகளில் இருந்து தவறியோ

உடைந்துவிடுகின்றன



உடைந்தபின் அவை

செடிகளுக்கோ பேனா-தூரிகைகளுக்கோ

வீடாகின்றன அல்லது

மூலைகளில் உறைகின்றன



குப்பைகளில் அவற்றை நான்

பெரும்பாலும் எறிவதில்லை

கையாள்பவர் கைகள்

காயம் பட்டுவிடக்கூடாது

என்ற அக்கறையிலோ

அவற்றைக் காணாமல்

இருக்க இயலாத என் சபலத்தினாலோ



என்னால் கோப்பைகளுக்கு

ஆகவேண்டியது ஒன்றுமில்லை

ஆனால் கோப்பைகள் எல்லாம்

கொள்வார் ஒருவர் பொருட்டே

பிறக்கின்றன.

No comments:

Post a Comment