காக்கைச்சிறகு. கறுப்புக்கவிதை. அடர்பச்சையும் மினுங்கும் கருப்புமாக எத்தனைக் காக்கைச்சிறகு கீழே கிடந்தாலும், கண்டுகொள்வதற்கு யாரும் இருப்பதில்லை. அதன் நிறம் உழைப்பாளியின் நிறம். சூரியன் அற்ற உண்மை பூமியின் நிறம். அகண்ட அண்டத்தின் நிறம். அன்னையின் கருப்பை நிறம். கருவறை விழுங்கிய நிறம். பூட்டிய அறைக்குள் மனிதரின் நிஜம். நிஜத்தின் நிழலின் நிறம். இவை ஒரு காக்கைச்சிறகின் வலைப்பதிவுகள்.
Search This Blog
Sunday, 10 March 2024
கோப்பைகள்
Photo credit: https://c1.wallpaperflare.com/preview/111/672/966/cup-top-view-coffee.jpg
இந்தக் கோப்பையைப் ஏந்தும்
லாவகத்துடன் தான்
விருப்பத்துடன் தான்
ஒவ்வொரு உறவையும்
ஏந்திக்கொள்கிறேன்
சில கோப்பைகள் பாரமாக
சில இலகுவாக
சில கோப்பைகள் அவற்றின்
பணி முடியுமட்டும்
சிலவற்றுக்கு
விரல்களின் வலிமை போதும்
சிலவற்றுக்கு
முழுக் கையையும்
பிரயோகிக்க வேண்டியிருக்கிறது
சில கோப்பைகள்
பிடித்துக்கொள்ள ஏதுவாக
சிலவற்றைக் கொஞ்சம் பயிற்சியுடன்
சில, கைப்பிடியற்று
வருகிறவண்ணமாய்த்தான்
அவை வருகின்றன
நான்தான் அவற்றைத்
தேர்ந்தெடுக்கிறேன்
பரிசாக வந்தவற்றை நான்
அதிகமாகப் பயன்படுத்துவதில்லை
வேண்டுமென்றே அவற்றை
நான் எறிந்து உடைப்பதில்லை
உணர்ச்சிவேகத்தில் பொருட்களை
எறிந்துடைக்கும் வயதில்
நான் இல்லை
தாமாகவே விழுந்தோ
கைகளில் இருந்து தவறியோ
உடைந்துவிடுகின்றன
உடைந்தபின் அவை
செடிகளுக்கோ பேனா-தூரிகைகளுக்கோ
வீடாகின்றன அல்லது
மூலைகளில் உறைகின்றன
குப்பைகளில் அவற்றை நான்
பெரும்பாலும் எறிவதில்லை
கையாள்பவர் கைகள்
காயம் பட்டுவிடக்கூடாது
என்ற அக்கறையிலோ
அவற்றைக் காணாமல்
இருக்க இயலாத என் சபலத்தினாலோ
என்னால் கோப்பைகளுக்கு
ஆகவேண்டியது ஒன்றுமில்லை
ஆனால் கோப்பைகள் எல்லாம்
கொள்வார் ஒருவர் பொருட்டே
பிறக்கின்றன.
Labels:
creativewriting,
creativity,
imagination,
poetry,
tamil,
tamilcinema,
tamilpoems,
writer,
writing
Subscribe to:
Posts (Atom)