Search This Blog

Tuesday, 13 April 2010

சித்திரை, தை - எது உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு?

இன்று காலையில் இருந்தே எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னவண்ணம் இருந்தனர் எனது உடன் ஆசிரியர்களும் மற்றோரும். எனக்கோ அது ஒரு பெரிய விஷயமாகவே தென்படவில்லை - 'சித்திரை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு'என்பதை நான் நம்புவதை விட்டுச் சில காலம் ஆகிறது. ஆம். அறிஞர்கள் பலர் மூலமும், நான் தனியே படித்து அறிந்த விஷயங்கள் மூலமாகவும், தமிழ்ப்புத்தாண்டு சித்திரை அல்ல என்பதையும், அது பிறநாட்டு நாகரிகங்களாலும் ஆட்சிகளாலும் ஏற்பட்ட பாதிப்பு என்பதையும் உணர்ந்து கொண்ட பிறகு, உண்மையிலேயே அவ்வாறே நம்பிக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை. புரட்சி ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இல்லாவிட்டாலும், 'நாம் அறிந்த சில விஷயங்களை பிறருக்குத் தெரியப்படுத்தலாமே' என்ற நோக்கத்தில் இந்த வலைப்பதிவை எழுத விழைந்தேன்.

சித்திரை, தை - எது உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு?

இவை இரண்டுமே இல்லை என்கின்றனர், தொ. பரமசிவம் முதலான சில தமிழறிஞர்கள். ஆம். இவை அனைத்துமே வடநாட்டுப் படையெடுப்புகளாலும், அந்த நாளைய ஆட்சியாளர்களாலும் தமிழ் நாட்டில் ஏற்பட்ட ஒரு குழப்பம் என்பது அவர்களது வாதம்.

ஆற்றங்கரை நாகரிகங்களும் விவசாய நாகரிகங்களுமே உலகின் ஒட்டுமொத்த பண்பாட்டுக்கும் துவக்கம். இதனால்தான் ஆற்றுப்படுகைகள் 'நாகரிகத் தொட்டில்கள்' என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்ச்சமுதாயமும் பண்டைக்காலந்தொட்டே விவசாயத்தை மையமாகக் கொண்ட சமுதாயம். அது ஆரியர்களைப்போல ஆடு மேய்த்து வந்த சமுதாயம் அல்ல.விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து நாகரிகங்களும் தத்தமது அறுவடை விழாக்களையே புதிய ஆண்டின் துவக்கமாகக் கொண்டாடி வந்துள்ளன. கிரேக்க, சுமேரிய, சீன நாகரிகங்கள் என அனைத்துக்குமே அப்படித்தான்.

ஆகவே, விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்த தொல்தமிழ்நாட்டில் அறுவடைத் திருநாளே புதிய ஆண்டின் துவக்கமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் கூடத் தமிழகத்தின் தென் பகுதிகளில் தைப்பொங்கல் தீட்டு அணுகாத பண்டிகைதான். ஏனெனில், தீட்டும் கீட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் எங்கிருந்து அறுவடை செய்வது? அதுமட்டுமல்ல, தீட்டு என்ற வழக்கமும் கூட தமிழ்ப் பண்பாட்டிற்கு மிகவும் புதியது. அது பண்டைய எப்ரேயர்களிடம் இருந்து ஆரியர்களுக்கும், ஆரியர்களிடமிருந்து அவர்கள் வழித்தோன்றல்களான பிராமணர்களுக்கும் தொற்றிக் கொண்ட ஒரு நோய்.

அது கிடக்கட்டும். இந்த அறுபது ஆண்டுச் சுழற்சி என்பதே பண்டைய சம்ஸ்கிருத அறிஞர்கள் வழக்கத்தில் கொண்டு வந்தது தான். 'விக்ருதி', 'ஸ்ரீவிருத்தி', 'பிரபவ' 'விபவ' என்று வழங்கப்படுகிற எந்தப் பெயருக்காவது தமிழ்மணம் இருக்கிறதா? இவை அனைத்தும் சமஸ்கிருதப் பெயர்கள் என்பது பார்த்த மாத்திரத்திலேயே விளங்கும். இவை 'வராஹமிஹிரர்' என்ற முனிவரால் கி.மு. முதலாம் நூற்றாண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவை. இவற்றுக்கும், அதே ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'விக்கிரம' (விக்கிரமாதித்திய மன்னனால் உருவாக்கப்பட்டது) மற்றும் 'ஷாலிவாகன' (கௌதமிபுத்திரன் சதகர்ணி என்ற சாதவாஹன மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது) சகாப்தங்களுக்கும் அதிக வேற்றுமைகளில்லை.

இது மட்டுமல்லாது, சித்திரை முதலான தமிழ் மாதங்களின் பெயர்களும் அவற்றின் சமஸ்கிருத பெயர்களினின்று வந்தவையே. சித்திரை என்பது 'சைத்ர', வைகாசி என்பது 'வைஷாக', மார்கழி என்பது 'மார்க' அல்லது 'மார்கசீர்ஷ'. இவை பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதனால் இவற்றின் வடமொழி வாடை அதிகம் வீசவில்லை.

அப்படியெனில், தமிழர்களுக்கு மாதங்கள் இருக்கவில்லையா? கண்டிப்பாக இருந்தன. ஆனால் அவை எதுவும் இன்று புழக்கத்தில் இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய ஒன்று. தமிழ் மாதங்கள் அனைத்தும் ராசி மண்டலங்களின் அடிப்படையில் 'சிங்கம்' முதலாக, 'கன்னி', 'மேழம்', 'இடபம்', போன்ற பெயர்களைக் கொண்டே வழங்கப்பட்டு வந்துள்ளன. கேரளாவில் இன்னும் மாதங்களின் இந்தப் பெயர்கள் வழக்கத்தில் உள்ளன. 'மேடமாசம்', 'கன்னிமாசம்' என்று அவர்கள் அவற்றை விழிப்பதே அழகு. 'கொடுந்தமிழே மலையாளம்' என்று பழம்பெருமையைக் குறித்து பெருமை அடித்துக்கொள்கிறோம், ஆனால் அந்த மொழி தமிழின் பல செம்மையான சொற்களைப் பயன்படுத்தி வருகிறது, 'மடி' (சோம்பல்), 'விளி' (அழை) போன்று. அவற்றை எத்தனை பேர் கண்டு பாராட்டி இருக்கிறோம்? போகட்டும்.

இன்று நமது கிழமைகள் வரிசையில் உள்ள 'சனி' மற்றும் 'புதன்' என்ற பெயர்களே இடைக்காலத்தில் (களப்பிரரின் இருண்ட காலமாக இருக்கலாம்) வந்து சேர்ந்தவை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவ்வக் கிழமைகளின் உண்மையான் பெயர் முறையே 'காரி' மற்றும் 'அறிவன்' என்பது.

இந்த வாதங்கள் அனைத்தின் மூலமாகவும் புலப்படக்கூடிய உண்மை என்ன?

தமிழ்நாடும் அதன் கலாச்சாரமும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேற்றுக் கலாச்சாரங்களாலும் பண்பாடுகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஆம். தமிழகத்தில் களப்பிரர் காலம் தொட்டு, அவற்றுக்குப் பின் வந்த பதாமி - சாளுக்கிய (தற்போதைய கர்நாடகம்), அவற்றின் ஆட்சியின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட விஜயநகரம் (தற்போதைய ஆந்திரம்), மராட்டிய - முகலாய படையெடுப்பு, நாயக்கர்கள் ஆட்சி என்ற பல்முனைத் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது, தமிழ்நாடு. இந்தப் படையெடுப்புகளால், அவற்றைக் கொணர்ந்த ஆட்சியாளர்களின் பேராசையால் இவை தமிழர்களின் வாழ்விற்குள் மெல்ல மெல்ல ஊடுருவியவை.

இருக்கட்டும். ஆனால் இவற்றைக் குறை சொல்ல, அல்லது குற்றம் சொல்ல என்ன ஆதாரம் இருக்கிறது?

முதலாவது, இவை பின்பற்றி வந்தது, இப்போது பின்பற்றி வருவது சந்திர நாட்காட்டி. நம்முடையது சூரிய நாட்காட்டி.

இரண்டாவது, இவற்றின் ஆண்டுகளே சித்திரையை முதல் மாதமாகக் கொண்டு துவங்குகின்றன, தமிழர்களுக்கு அது பொருந்தாது.

மூன்றாவது, இந்த மொழிகளைப் (கன்னடம், தெலுங்கு, மராட்டியம்) பேசும் மக்களது புத்தாண்டு (யுகாதி என்று பரவலாக அறியப்படுவது) துவங்குவது தமிழ்ப்புத்தாண்டுக்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் - அதாவது நமது பங்குனி மாதத்தின் நடுவில். பங்குனி என்ற பெயர் கூட 'பால்குண' என்ற சம்ஸ்கிருத, 'பால்குன்' என்ற உருதுப் பெயரின் நீட்சியே ஆகும்.

ஆக, இவர்களைப் போலத்தான் நமது மாதங்களும் சித்திரையை முதலாகக் கொண்டுள்ளன என்று வைத்துக் கொண்டாலும் நமது புத்தாண்டும் அவர்களுடையதை ஒட்டி, அதே நாளிலல்லவா வரவேண்டும்? அப்படி இல்லையே? இந்த உண்மையை உணர்ந்து பார்ப்பவர்கள் இன்று அதிகம் இல்லை.

தமிழ்க் கலாச்சாரமும் பண்பாடும் துவக்கம் முதலே தனித்தன்மை வாய்ந்தது. அதன் மொழியும் சரி, மற்ற கூறுகளும் சரி - அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை. பிற மொழி அல்லது பிற நாகரிகங்களின் ஆதிக்கம் அதற்குத் தேவையில்லை. தன் நடைமுறைகளுக்காகவும் பழக்கவழக்கங்களுக்காகவும் யாரையும் - அல்லது எதையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை. இவை அனைத்துமே நமக்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டவை - ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மக்களுக்குப் பழகிப்போய் விட்டன, அடிமைத்தனமும் கூடச் சில நேரம் பழகிப்போய் விடுவதில்லையா - அதுபோல.

உறக்கத்தில் இருந்து எழும்வரை சரி - எழுந்த பின் எப்போதும் விழிப்புடன் இருப்பதுதானே முறை? 'இது நமது புத்தாண்டு அல்ல' என்று அறியாதவரை சரி - அதை ஒருவர் கண்டறிந்து சொன்னபின் அதை உணர்ந்து, அதை பின்பற்றுவதுதானே முறை? தமிழ் கூறும் நல்லுலகத்தோர் அதை விடுத்து, பிற நாட்டிலிருந்து வந்து, இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி ஊட்டிவிட்ட வழக்கங்களைக் கண்ணும் கருத்துமாகக் கைக்கொள்வது உண்மையிலேயே வருந்தத்தக்க ஒன்று. 'தன்னை அறிவதே அறிவு' என்றான் ஒரு ஞானி.

அறிவோம்; தெளிவோம்; அரி ஓம்.